Breaking News

மின்சார பிரச்சினைக்கு இந்தவார இறுதியில் தீர்வு!


திடீர் மின் தடையால் ஏற்பட்ட மின்சார பிரச்சினைக்கு இந்தவார இறுதியில் தீர்வை வழங்கவுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. 

மின் தடையால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளும் தடைப்பட்டதாக இலங்கை மின்வலு அமைச்சின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். 

தற்போதைய நிலைமையால் நேற்று (18) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

எவ்வாறாயினும் சில இடங்களில் நேற்று மின் தடை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அத தெரண வினவியதற்கு பதிலளித்த மின்வலு அமைச்சின் தலைவர் விஜித்த ஹேரத், அனல் மின் நிலையத்தின் செயற்பாட்டை குறுகிய காலத்திற்குள் வழமைக்கு கொண்டு வருவது கடினம் என கூறினார். 

ஆனாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையாகும் போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார். 

மின் வழங்கல் போதுமாக இருந்தமையால் நேற்று சில பகுதிகளில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.