Breaking News

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்...

 


*இயற்கை வழி பிரசவமாக (சுகப்பிரசவம்) இருந்தால் குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குப் பிறகும், அறுவை சிகிச்சையாக (C - section) இருந்தால் ஆறு மாதத்திற்குப் பின்பும் உடற்பயிற்சிகள் தொடங்கலாம். 

*ஆரம்ப நிலை உடற்பயிற்சி முதல் படிப்படியாக அதிகரித்து கடினமான உடற்பயிற்சிகள் வரை செய்யலாம். 

*இயன்முறை மருத்துவர் உங்களை முழுவதும் பரிசோதித்து பின் எந்தெந்த தசைகளுக்கு வலிமை பயிற்சிகள், இலகுவாக்குவதற்கான பயிற்சிகள், தாங்கும் ஆற்றலுக்கான பயிற்சிகள் (Cardiac Endurance), எடை குறைய உதவும் பயிற்சிகள் எனத் தனித்தனியாகப் பிரித்து கற்றுக்கொடுப்பர். 

*ஒவ்வொரு பயிற்சியும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், இதனை செய்தால் போதும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. 

*மேலும் குழந்தையை அதிக நேரம் தூக்க வேண்டும் என்பதால் கைகள், தோள்பட்டைக்கான பயிற்சிகள் வழங்குவார்கள். கூடவே,எப்படி, எவ்வாறு குழந்தையை தூக்குவது, எந்த முறையில் பால் கொடுப்பது போன்ற யுக்திகளையும் கற்றுக் கொடுப்பர். இதனால் உடல் வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம். 

கவனிக்க வேண்டியவை... 

* யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், சில பயிற்சிகளை குழந்தை பிறந்த பின்பு செய்யக் கூடாது. அதேபோல சில பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 

* அதேநேரம், உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு. தாய்ப்பால் உற்பத்தி செய்ய நிறைய சக்தி தேவைப்படும். கூடவே கால்சியம், இரும்பு, வைட்டமின் பி12, டி போன்ற ஊட்டச்சத்துகள் சராசரியாக மற்றவர்களுக்கு தேவைப்படுவதை விட ஒரு பங்கு அதிகமாக தேவைப்படும் என்பதால், அளவைக் குறைப்பது புத்திசாலித்தனம் இல்லை. 

*போதிய அளவு உறக்கம் என்பது புது தாய்மார்களுக்கு கிடைக்காது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், தூக்கம் சரியாக இல்லை எனில் மாவுச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள் மீது நாட்டம் (Sugar Cravings) வரும். இதனால் நொறுக்குத் தீனி, சாப்பாடு அதிகம் சாப்பிடுவது, இனிப்பு வகைகள் உண்பது என உடல் எடை அதிகரிக்குமே தவிர தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. எனவே, கட்டாயமாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். 

*பிஸ்கட், சிப்ஸ், கேக் போன்ற நொறுக்குத் தீனிகள் தின்பதற்கு பதில் பழங்கள், காய்கறிகள் நிறைந்த சாலட்கள், வேகவைத்த பயிறு, கடலை வகைகளை தாராளமாக உண்ணலாம். இதனால் எடையும் ஏறாது, ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். 

*சரிவிகித உணவு முறையை (Balanced diet) கட்டாயம் தொடர வேண்டும். பேலியோ, நீர், கீட்டோ டயட் போன்றவற்றை கடைபிடிப்பதில் முழு பலன் இருக்காது. 

*சினிமா நடிகைகள், இணையதள பிரபலங்கள் மட்டும் குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் எடையை குறைக்கிறார்களே என்று சிலருக்கு தோன்றலாம். ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்து மாறுபடும் என்பதால், நமக்கானதைத் தேடி, அறிந்து அதன் வழி மாற்றிக்கொள்வது நல்ல பலன்களை தரும். 

*தாங்களாகவே நடைப்பயிற்சி, ரன்னிங், நடனம், வெறும் உணவு வழியாக எடையை குறைப்பது போன்றவை செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என நினைத்தால் செய்யலாம். ஆனால், சில வகையான தசை வலிமை பயிற்சிகள், தசை இலகுவாக இருக்க பயிற்சிகள் எனக் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் முதுகு வலி, முன் வயிற்றில் தசை பிரிவதை தடுப்பது போன்ற பல பேறுக்காலத்திற்குப் பின் வரும் சிக்கல்களை தவிர்க்க முடியும். நம் உடலிற்கு எது பொருந்துமோ அதன் வழியை பின்பற்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்து நடப்பதே என்றென்றைக்கும் சிறந்தது.