கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி அரசியல் தீர்வைக் காணலாம்! ராஜித கூறுகிறார்
நல்லாட்சி மாற்றத்தின் போது உதவியவர்களுடன் அரசியல் தீர்விலும் ஒன்றாக பேசி தீர்வுகாண்பது இலகுவான காரியமாகும். நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண தயாராக உள்ளோம் என சுகாதாரதுறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மின்சாரக் கதிரை கதைகளை கூறி மக்களை ஏமாற்றிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு இறுதியில் ஆட்சிக் கதிரையும் இல்லாமல் போய்விட்டது. எனினும் மஹிந்தவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு கதிரையை வழங்கியுள்ளோம் எனவும் அவர் குறிபிட்டார்.
அரசியல் தீர்வு தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறாக அமையும் என்பது தொடர்பிலும் உள்ளக பொறிமுறை விவகாரம் தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலும் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மின்சாரக் கதிரை கதைகள் எல்லாம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன. மின்சாரக் கதிரை கதைகளை கூறி மக்களை ஏமாற்றிய மஹிந்த ராஜபக் ஷவுக்கு இறுதியில் ஆட்சிக் கதிரையும் இல்லாமல் போய்விட்டது. அரச கதிரையில் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்ற ஆசையில் தான் அன்று மஹிந்த மின்சாரக் கதிரையை பற்றி பேசிக்கொண்டி இருந்தார். ஆனால் இப்போது இரண்டு கதிரைகளும் அவருக்கு இல்லாமல் போய்விட்டன. அதனால் தான் அவருக்கு பாராளுமன்றத்தில் ஒரு கதிரையை வழங்கியுள்ளோம். இந்தக் கதிரை உறுதியானது. மக்கள் மத்தியில் நல்ல விடயங்களை கொண்டு சென்றால், நாட்டுக்கு நன்மையளிக்கும் விடயங்களை செய்தால் இந்தக் கதிரையை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
ஒரு கட்டத்தில் தன்னை சரியாக பலப்படுத்திக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வெற்றி கொண்ட தலைவரானார். அதன் பின்னர் தனது குடும்பத்தை மட்டுமே அரசியலில் நிலைப்படுத்த வேண்டும் எனற எண்ணம் வந்த பின்னரே முழுமையாக தனது அதிகாரங்களை இழக்க நேரிட்டது. மக்களின் எதிர்பார்ப்பும் ஆதரவும் ஒரு கட்டம் வரையில் தான் கைகொடுக்கும். எல்லை மீறி போகும்போது மக்களினாலேயே சாம்ராஜியம் வீழ்த்தப்படும். உலகில் பல தலைவர்கள் அவ்வாறு மக்களினாலேயே வீழ்த்தப்பட்டனர். அதே நிலைமைதான் இன்று மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஏற்பட்டுள்ளது. இதை அனைத்து தலைவர்களும் மனதில் வைத்துக்கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
மேலும் அன்று யுத்தம் முடிவுக்கு வந்தபோதே யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அதற்கு தயாராக வேண்டும் என முதலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு நான்தான் சொன்னேன். ஆகவே யுத்தத்தின் பின்னரான செயற்பாடுகளை ஜனநாயக ரீதியில் மூவின மக்களும் அனுபவிக்கும் வகையில் கையாளும்படியும் நாம் தெரிவித்தோம். ஆனால் எமது ஆலோசனைகளை மஹிந்த கவனத்தில் கொள்ளவில்லை. தனது சர்வாதிகார போக்கின் விளைவு இறுதியில் அவரை அதிகாரமில்லாத தலைவனாக மாற்றும் நிலைமைக்கு கொண்டுவந்து விட்டது. இவை அனைத்தையும் நல்ல உதாரணங்களாக கொள்ள வேண்டும்.
மேலும் அன்று எமக்கு இருந்த அழுத்தங்கள் இன்று இல்லை. இன்று நாம் சர்வதேச ஒத்துழைப்புகளுடன் இணைந்து நாட்டை முன்னெடுத்து செல்கின்றோம். அதேபோல் இராணுவம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எமது பொறிமுறைகளின் மூலம் கையாள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அத்தோடு அதிகளவான உள்ளக பொறிமுறைகளை கையாண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவை எதுவும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை. ஆகவே சர்வதேச சக்திகளை வென்றதே எமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்.
அதேபோல் இப்போது அதிகார மட்டத்தில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் தீர்க்கவேண்டிய முக்கிய பிரச்சினைகள் சில உள்ளன. குறிப்பாக அரசியல் பிரச்சினைக்கு தீர்வுக்கான வேண்டும். அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாணுவதன் மூலமாக ஏனைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம். ஆகவே அது தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்.
மேலும் இப்போது அரசாங்கத்துக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நல்லாட்சியை அமைப்பதில் அவர்களது பங்கும் இருந்தது. அதே போல் ஒரு இனத்தை முழுமையாக பிரதிநித்துவப் படுத்தும் கட்சியாக அவர்களின் நிலைப்பாட்டுடன் நாமும் இணைந்து செயற்படவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே அவற்றை கருத்தில் கொண்டு செயற்படுகின்றோம். நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண தயாராக உள்ளோம் என்றார்.








