எல்லை தாண்டியதாக 24 மீனவர்கள் கைது
கடல் எல்லையை தாண்டியதாக கூறப்படும் 24 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு, 4 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் வில்வராஜ், கடலில் மூழ்கிவிட்ட நிலையில் அவரை மீட்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக இராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அறிவித்தனர்.
இதனால் கடந்த வாரம் அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த 10–ம் திகதி அவர்கள் மீண்டும் தொழிலுக்கு சென்றனர். 2–வது முறையாக நேற்று ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.
அவர்களில் ஒரு தரப்பினர் தனுஷ்கோடி–தலைமன்னார் இடையே உள்ள கடலில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் இராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் ஏறி மீனவர்களை இந்த பகுதியில் வரக்கூடாது என எச்சரித்தனர்.
மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் கடலில் தூக்கி வீசினர். மீனவர்களின் வலைகளும் அறுத்து சேதப்படுத்தினர், என தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது.
பின்னர் அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 24 மீனவர்களை கைது செய்து, 4 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். இதை பார்த்த மற்ற மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக கரை திரும்பினர், என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது








