22 வருட சாதனையை முறியடிப்பாரா யூனுஸ்கான்
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி தொடர் அபூதாபியில் இன்று ஆமை்பமாகிறது.
இந்த தொடரின் 3 போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்த போட்டியில் பங்கேற்கிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனுஸ்கான் மேலும் 19 ஓட்டங்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை கடந்த 22 ஆண்டுகளாக தக்க வைத்து இருக்கும் முன்னாள் தலைவர் ஜாவித் மியாண்டட் (124 டெஸ்டில் 8,832 ஓட்டங்கள்) சாதனையை முறியடிப்பார்.
37 வயதான யூனுஸ்கான் இதுவரை 101 டெஸ்டில் விளையாடி 8,814 ஓட்டங்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் இதுவரை 74 முறை டெஸ்ட் போட்டியில் சந்தித்து இருக்கின்றன.
இதில் இங்கிலாந்து அணி 22 முறையும், பாகிஸ்தான் அணி 16 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 36 போட்டிகள் சமநிலையில் முடிந்தன. இரு அணிகளும் இன்று மோதுவது 75 வது முறையாகும்.








