Breaking News

ஜெனீவா செல்கிறது கூட்டு எதிரணி



நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டக்கோரி ஜெனீவா செல்வதற்கு கூட்டு எதிரணி மீண்டும் தயாரகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பிரகாரம் கூட்டு எதிரணி அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்திலும், பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற ஒன்றியத்திலும் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்குரிய வேலைத்திட்டங்களை எடுத்து வருகின்றது.

இதுகுறித்து, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில், மக்கள் ஆணை பெற்ற 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கூட்டு எதிரணியாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றோம்.

தேசிய அரசாங்கம் உருவக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட வரவு செலவுத்திட்டங்களுக்கு மக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு எதிர்த்து வாக்களித்தே வந்துள்ளோம். இந்நிலையில் 52 உறுப்பினர்கள் ஒன்றாக இருக்கின்றபோதும் எம்மை எதிர்க்கட்சியாக அங்கீகாரிக்க தற்போதைய ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.

கூட்டு எதிரணியினைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களினது ஜனநாயக உரிமைகள் மறுதலிக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பார்க நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம். நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

எனினும் நியாயம் கிடைப்பதாக இல்லை. இந்நிலையில் கடந்த காலத்தில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர்களான உதயகம்மன்பில, டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜெனீவாவிலுள்ள அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாட்டை செய்திருந்தோம்.

எனினும் எமது அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறும் செயற்பாடுகள் தற்போதும் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக நாடாளுமன்றத்தில் எமது அணி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு முயல்கின்ற வேளையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. சரியான பதிலளிப்புக்கள் இடம்பெறுவதில்லை- என்றார்.