Breaking News

புலிநீக்கம் தேவையென்பதாலேயே கஜேந்திரகுமாரை வெளியேற்றினோம்(காணொளி)

நேற்று (19.01.2018) ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில்
ஒலிபரப்பான ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சியின் லண்டன் கிளைச் செயலாளர் திரு. வே. ஜெகேந்திரபோஸ் இது பற்றிக் தனது கருத்தைக் கூறுகையில், தேர்தலில் யாழ் மாவட்டத்திற்கு 3 வேட்பாளர்களை திரு. கஜேந்திரகுமார் கேட்டதாகவும், ஆனால் ஒருவருக்கு மாத்திரம் வழங்கமுடியம் என திரு. சம்பந்தன் தெரிவித்ததாகவும் கூறிய அவர் இவ்விடயத்தில் இந்தியாவின் அழுத்தங்கள் இருந்ததாகவும் அதனாலேயே மற்றைய இருவருக்கும் ஆசனம் வழங்கவில்லை என கூறினார். இத்தகவலை வெளிப்படையாக ஒரு ஊடகத்தில் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2010 ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னர் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை திரு. கஜேந்திரகுமார் பலதடவை விளக்கியிருக்கிறார். யுத்தம் நிறைவுக்குகொண்டுவரப்பட்ட 2009ம் மே மாத இறுதியில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்தாகவும், ஒற்றையாட்சிக்குள் பதின்மூன்றாம் திருத்தத்தை அரசியற் தீர்வாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியதாகவும் அதற்கு திரு. சம்பந்தன் உடன்பட்டபோதிலும் தான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இக்கொள்கை வேறுபாடு காரணமாகவே தான் கூட்டமைப்பிலிருந்து விலகியதாக அவர் விளக்கமளித்திருந்தார்.



திரு. கஜேந்திரகுமார், தன்னைத் தவிர திருமதி. பத்மனி சிதம்பரநாதன், திரு. கஜேந்திரன் ஆகியோரையும் வேட்பாளர்களாக நிறுத்தும்படி கேட்டிருந்தார் என்பது சரியான தகவல் என வைத்துக்கொள்வோம். மேற்படி இருவரும் தமிழ் கொங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல, முன்னைய தேர்தலில் விடுதலைப்புலிகளின் தலைமையினால் நிறுத்தப்பட்டவர்கள் என்ற வகையில் இவர்களை வேட்பாளர்களாக நியமிப்பதற்கு இந்தியா மறுப்புத் தெரிவித்திருக்குமானால், இந்தியாவின் ‘புலி நீக்க அரசியலுக்கு’ திரு. சம்பந்தன் உடன்பட்ட விடயம் உண்மை என்பது இங்கு நிருபணமாகிறது. மேலும், கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் அளவிற்கு இந்தியாவின் தலையீடுகள் இருக்கிறது எனில் மற்றைய விடயங்களில் எந்தளவு தலையீடு இருக்கும் எனபதனை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.