இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கை ஜெனீவா மாநாட்டில் சமர்ப்பிப்பு!
இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை ஒன்றை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான ஜெனீவா மனித உரிமைகள் சபையின் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 28ஆவது அமர்வு ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஆசிய வலய ஒன்றியம் உள்ளிட்ட சில அரச சார்பற்ற அமைப்புகள் இணைந்து இந்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் 2009ஆம் ஆண்டில் முடிவடைந்த போதிலும், இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பை மோதல் தொடர்பான விடயங்கள் பாதிப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை சீர்திருத்தவென அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் குறித்து அந்த அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறிப்பிடும் விதத்தில் தேசிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தலாம் என்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
இலங்கையில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பணியாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தவுள்ளதாக முன்வந்துள்ளமையை வரவேற்றிருக்கும் மனித உரிமைகளுக்கான ஆசிய ஒன்றியம் இந்த சாதகமான உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் காணப்படுகின்ற தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரம் முடிவிற்கு வருமா என்பதுதெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரும், ஆணைக்குழுவும் இலங்கையின் நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக அவதாணிக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.