மஹிந்தவின் தோல்விக்கு இந்தியா, அமெரிக்காவே காரணம் - பசில் குமுறல்
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியைக் கவிழ்க்க இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தீவிரமாக செயற்பட்டதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ ராஜபக்ஸ குடும்பத்தினரை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது.
ராஜபக்ஸவினரை மக்களினால் மாத்திரமே அரசியலில் இருந்து விரட்டியடிக்க முடியும். மஹிந்த ராஜபக்ஸ என்பவர் போராடி முன்னேறிய ஒரு தலைவர். அவர் சூழ்ச்சிகளைச் செய்து தலைவராகவில்லை.
மஹிந்த தோல்வியடைந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், நாட்டின் நிலைமைக் குறித்து கவலையடைகின்றேன். மஹிந்த ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது.
ஒருவருடம் நிறைவடைகின்ற இந்த சந்தர்ப்பத்தில் மைத்திரியை ஜனாதிபதி ஆசனத்திற்கு கொண்டு வந்தது சரியா, பிழையா என மக்கள் சிந்தித்து பார்ப்பர். இந்த நாட்டில் எந்த மாதிரியான மாற்றம் வந்துள்ளது என மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.
அத்துடன் மஹிந்தவின் தோல்விக்கு நான்தான் காரணம் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டினை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். அன்று அரசாங்கத்தில் இருந்த குறைபாடுகளும், சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே மஹிந்த தோல்வியடைந்தார்.
அன்று பலமான நாடுகள் எங்களுடன் போட்டியிட்டன, குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எங்களுக்கு எதிராக செயற்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு தேசிய ரீதியிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
இதன் பின்னணியில் அமெரிக்காவும், இந்தியாவும் முன்னிலையில் இருந்து செயற்பட்டன. தேர்தலின் போதும் அவர்கள் அழுத்தம் கொடுத்தனர். அதனை இல்லை என்று மறுக்க முடியாது.’ என்றும் கூறியுள்ளார்.