“சிங்க லே”என்ற அமைப்பு குறித்து ராஜித அம்பலம்
“சிங்க லே”என்ற அமைப்பினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முன்னாள் செயலாளர் ஒருவரே வழிநடத்தி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது நேற்று ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“சிங்க லே” அமைப்பு பற்றி புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் தேசிய ஒற்றுமை, சிறுபான்மை சமூகத்தின் நலன்களுக்காக குரல் கொடுத்த ஊடகவியலாளர் ஒருவரே “சிங்க லே” அமைப்பினை வழிநடத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறித்த ஊடகவியலாளர் முன்னதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர்களில் ஒருவராக கடமையாற்றியிருந்தார்.இனவாத நிலைக்கு இவ்வாறானவர்கள் தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவே அமைச்சர் மங்கள சமரவீரவும் அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் பரவாயில்லை. அதிகாரத்திற்காக இனவாதத்தை மதவாதத்தை தூண்டுவதனை நினைத்துப் பார்க்க முடியவில்லை என அமைச்சர் ஊடகச் சந்திப்பில் கூறியுள்ளார்.
மங்கள சமரவீரவின் முன்னாள் செயலாளர் ருவான் பெர்டினன்டஸ் பற்றியா நீங்கள் கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.“ஆம் அப்படித்தான் சொல்லப்படுகின்றது” என அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இதேவேளை. அமைச்சர் ராஜிதவின் கருத்தை அவ்வளவு பாரதூரமாக கருத வேண்டியதில்லை எனவும், அரசாங்கம் ஆட்சி அமைத்தது முதல் இவ்வாறான சில கருத்துக்களை அவர் வெளியிட்டு வருவதாகவும் ருவான் பெர்டினான்டஸ் சிங்கள இணைய தளமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.தம்மை இழிவுபடுத்த முயற்சிக்கும் ஊடகமொன்று இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் தம்மை தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளராக சித்தரித்த குறித்த ஊடகம் தற்போது சிங்கள இனவாதியாக சித்தரிப்பதாக ருவான் மேலும் தெரிவித்துள்ளார்.