மாற்றுக் கட்சியொன்று உருவாகும்! மகிந்த எதிர்வுகூறுகிறார்
தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கும்போது புதிய மாற்று அரசியல் கட்சியொன்று உருவாக்கும் நிலை இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி, ஶ்ரீதலதா மாளிகைக்கு நேற்று (07) சென்றுதிரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதில் பங்குகொள்வீர்களா என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னைத் துரத்துவதற்கு பலர் முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அநுர பண்டாரநாயக்க கட்சியை விட்டுச் சென்ற சந்தர்ப்பத்தில்கூட தான் கட்சியைப் பாதுகாத்ததாகவும், அதனால் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டுச் செல்லப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரநாயக்கவின் கொள்கையை மதித்து, கட்சியின் வளர்ச்சிக்குத் தான் ஆதரவு வழங்குவதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.எதிர்க்கட்சியின் குரலுக்காக இந்த நாட்டிற்கு புதிய கட்சியொன்றின் தேவையுள்ளது. இவ்வாறு பயணித்தால் கட்சியை சரியான வழியில் நடத்த முடியாது.
கடந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும், எதிர்க்கட்சி அமைப்பாளர்களாகவும் பதவி வகிக்கின்றனர். எனவே எதிர்க்கட்சி சார்பாக குரல் எழுப்ப புதிய கட்சியொன்றின் தேவை உள்ளது என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிதாக கட்சியொன்ற ஆரம்பிக்கப்படவுள்ளதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.