தமிழ் மாணவர்களின் மரணத்துக்கு நியாயம் கோரி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு அதிரடிப்படையினரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ரஜிதர் மனோகரன் உள்ளிட்ட 5 தமிழ் மாணவர்களின் மரணத்திற்கு நியாயத்தை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி அமெரிக்காவில் நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக குறிப்பிடப்படுகின்றது.
5 மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் உட்பட 15 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசேட குழு, 2009 ஆம் ஆண்டு குறித்த விசாரணை அறிக்கையை முன்னாள் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் குறித்த மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என மிக நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.
எனவே, பொறுப்புக் கூறும் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு நியாயத்தை நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.








