மஹிந்த ஆதரவு அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் மஹிந்த
காலியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் பங்கேற்காமல் வேறு மேதின கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தால் அவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் இம் முறை காலியில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும்.
இங்கு வராது வேறு மே தின கூட்டங்களில் கலந்து கொள்வது கட்சியின் கொள்கைக்கும் இணக்கப்பாடுகளுக்கும் முரணானதாகும். இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக மத்திய செயற்குழு ஊடாக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் கட்சியின் கொள்கைகளை மீறி வேறு மே தின கூட்டங்களில் யாரும் கலந்துகொள்வார்கள் என நாங்கள் கருதவில்லை. அனைவரும் காலிக்கு வருகை தந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கலந்துகொள்ளும் மேதின கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.








