Breaking News

வெள்ளை வான் கலாசாரத்தை ஒழிக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வெள்ளை வான் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோரி காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஒன்றியத்தினால் மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


இந்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மீண்டும் வெள்ளை வான் அச்ச சூழ்நிலை எழுந்துள்ளதை கண்டித்தும், அவ்வாறான சம்பவங்கள் ஏற்படாத வகையில் தடுத்து நிறுத்துமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

காந்தி பூங்காவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை சென்றடைந்த நிலையில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அத்துடன், மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்த தந்திரியிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடகிழக்கில் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மீண்டும் ஒரு வெள்ளைவான் கடத்தல் காலத்தினை ஏற்படுத்தி எங்களை அச்ச நிலைக்கு தள்ள வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.