சர்வதேச நீதிபதிகள் குறித்த சர்ச்சைக்கு பதிலளிக்க மறுத்தார் சுமந்திரன்
யுத்தக்குற்றங்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்ப டவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணை பொறிமுறையில், சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு குறித்து ஸ்ரீலங்கா அரசின் முரண்பட்ட கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகளை கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதுவரின் இல்லத்தில் இன்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மத்தியாபரனம் ஆப்ராஹம் சுமந்திரன், சர்வதேச நீதிபதிகள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரச தரப்பினர் தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு அவசரப்பட்டு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜெனீவாவில் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தமாக இருப்பதாகவும் இன்றைய சந்திப்பின் போது கூட்டமைப்பினர் அமெரிக்க பிரதிநிதிகளிடத்தில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








