சுவாதியின் கொலைக்கான காரணம் ஒருதலை காதல் அல்ல; அது ஆணவக்கொலையே
சுவாதி கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பண்ருட்டியில் பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில்,
சுவாதி கொலை வழக்கில் ஏராளமான சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன. இவை எல்லாம் ஆதார பூர்வமான தகவல் என்று கூறமுடியாவிட்டாலும் கூட, ஒன்றையும் புறம் தள்ள முடியாததாக உள்ளன.
தற்போது பேசப்படுவது, சுவாதி கொலை ஒருதலை காதல் கொலை அல்ல. அது ஜாதி ஆணவக்கொலை. மதம்விட்டு மதம் திருமணம் செய்வதற்கான முயற்சி நடந்த போது இந்த கொலை நடத்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையின் நடவடிக்கையில் முன்னுக்கு பின் முறனான போக்குகள் உள்ளன. சுவாதியின் முகநூல் விபரங்கள் இன்னும் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்களை தருகின்றன. ராம்குமார் முகநூலில் சுவாதியை பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது மேலும் அதிர்ச்சியை தருகிறது.
முகநூல் மூலம் தான் சுவாதியிடம் ராம்குமாருக்கு நட்பு ஏற்பட்டது. அதுதான் ஒருதலை காதலாக மாறியது. அதன் அடிப்படையில் தான் ராம்குமார் சென்னையில் தங்கினார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று விவாதிக்கப்படுகிறது.
எனவே உண்மையை மூடி மறைப்பது, நீதிக்கு எதிராக செயல்படுவது, யாரை காப்பாற்ற என்ற கேள்வி எழுகிறது. சுவாதி முகநூல், தொலைபேசி ஆகியவை மூலம் கண்டறிந்தத் தகவல்களை காவல்துறை வெளியிட மறுப்பது ஏன்.
பிலால் மாலீக் என்பவரோடு சுவாதிக்கு ஏற்பட்ட நட்பு எத்தகையது. காவல்துறை புலனாய்வு செய்வதற்கு முன்னரே மற்றவர்கள் மாலீக் பிலால் பெயரை பதிவு செய்தது எந்த அடிப்படையில்.
சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மாலீக் பிலால் வந்தது எப்படி, அவருக்கு யார் தகவல் அளித்தது என பல கேள்விகள் எழுகின்றன. இதை காவல்துறை மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. எனவே தான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.








