மக்கள் வாழ்வில் இனி நல்லொளி வீசட்டும்: சம்பந்தன் - THAMILKINGDOM மக்கள் வாழ்வில் இனி நல்லொளி வீசட்டும்: சம்பந்தன் - THAMILKINGDOM
 • Latest News

  மக்கள் வாழ்வில் இனி நல்லொளி வீசட்டும்: சம்பந்தன்  நீண்ட நெடுங்காலம் துன்ப, துயரங்களை அனுபவித்த மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு, அவர்கள் வாழ்வில் நல்லொளி வீச இறையருளை பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

  அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தீபாவளித் திருநாளானது இந்து மதத்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு சமய விழாவாகும்.ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாளாகிய சதுர்த்தசி பொருந்திய நாள் தீபாவளிக் காலமாகும். இந்நாளில் வீடுகளிலும் அக்கம் பக்கங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுவதனால் இந்நாளுக்குத் தீபாவளி என்று பெயர்வந்ததாக சைவப் பெரியார்கள் குறிப்பிடுகின்றனர்.

  பல கொடுமைகளையும், பஞ்சமா பாவங்களையும் செய்து வந்த நரகாசுரன் என்ற அசரனின் துன்புறுத்தல்களிலிருந்து தம்மை விடுவிக்குமாறு இறைவனிடம் தேவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, எம் பெருமானால் அவன் சம்ஹாரம் செய்யப்பட்டபோது, தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அன்றைய நாளில் யாரெல்லாம் ஆசாரமுள்ளவர்களாய், பஞ்சமாபாவங்களைவிடுத்து இறைவனைத் தியானித்துப் பூஜிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரகம் விடுத்துச் சொர்க்கம் அருள வேண்டும் எனக் கேட்டதற்கமைய அவனுக்கு அருள் வழங்கி மோட்சமளித்ததாக எமது சமய நூல்கள் செப்புகின்றன.

  அத்தகைய சிறப்புமிகு இன்றைய இத்தீபத் திருநாளில் நீண்ட நெடுங்காலம் துன்ப, துயரங்களை அனுபவித்த மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு வாழ அனைவரும் இணைந்து இறையருளை வேண்டிப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டுவதுடன், எமது மக்கள் சாந்தி, சமாதானம் பெற்று வாழ எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: மக்கள் வாழ்வில் இனி நல்லொளி வீசட்டும்: சம்பந்தன் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top