நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 44 - THAMILKINGDOM நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 44 - THAMILKINGDOM
 • Latest News

  நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 44

  மிகச் சிரமப்பட்டு நடந்து வந்த பெருமாள் அப்படியே முற்றத்தில் இருந்துவிட்டார். அவர் தாங்க
  முடியாத களைப்பில் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். இரு கரங்களையும் பின்புறமாக ஊன்றியவாறு, முகத்தை வானத்தை நோக்கி வைத்தவாறு வாயைத் திறந்து கடும் முயற்சியுடன் சுவாசித்துக்கொண்டார். தகப்பன் வருவதைக் கண்டதும் குடிசையை விட்டு வெளியே வந்த முத்தம்மா அவரருகில் சென்று குந்தியவாறு, “என்னப்பா – என்ன செய்யுது?” எனக் கேட்டாள்.

  “ம்.. கொஞ்சத் தூரம் நடந்தது.. தாங்க ஏலாமல் களைக்குது”, எனத் தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தார் அவர். நிலைமையப் புரிந்து கொண்ட முத்தம்மா வீட்டக்குள் போய் ‘பம்மை’, எடுத்து குளிசையை போட்டு முறுக்கி உடைத்துவிட்டு அவரிடம் நீட்டினாள். அவர் அதை வாங்கி இழுத்த போதும் முழுமையாக மருந்து உட்செல்லவில்லை. சில வினாடிகள் மூச்சை அடக்கி வைத்திருந்துவிட்டு மீண்டும் அதை ஒரு முறை இழுத்தார். தகப்பன் – படும்பாட்டைப் பார்த்தபோது அது அவரை இந்த நிலையில் விட்டுவிட்டு, தான் போராளியாகப் போகமுடியுமா? என்ற கேள்வியை அவளுள் எழுப்பியது. அதற்காக இரு குடும்பங்களையும் தனது தலையில் சுமத்திவிட்டு சுந்தரம் ஆயுதம் ஏந்தப்போவதையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

  “அப்பா பாயை விரிக்கிறன், உள்ளை வந்து படுங்கோ”, என்றுவிட்டு அவள் மெல்லப் பெருமாளைப் பிடித்து எழும்பிவிட்டாள். “வேண்டாம் பிள்ளை.. நான் கொஞ்ச நேரம் அந்த மரத்தோடை போய்ச் சாய்ஞ்சு கொண்டு இருக்கப் போறன்”, என்றுவிட்டு அந்த மாமரத்தை நோக்கி நடந்தார் பெருமாள். இப்போ பார்வதிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள் முத்தம்மா. தான் அவளிடம் எதையாவது சொல்லி சமாளிக்காவிட்டால் அவள் சுந்தரத்திடம் ஏதாவது கேட்க, அவன் எதையாவது சொல்லி வைக்க, பின்பு பெரும் பிரச்சினையாகிவிடுமென்றே முத்தம்மா கருதினாள்.

  அவள் தயங்கியவாறே பார்வதியின் குடிசைக்குப் போனாள். பார்வதி இரவு சமையலுக்கு அரிசி புடைக்க ஆரம்பித்திருந்தாள். அவளின் அருகில் போய்க் குந்தினாள் முத்தம்மா. பார்வதி சுற்றிவளைக்காமலே நேரடியாகக் கேட்டாள், “ஏன், ஏனடி அழுதனீ.. என்ன நடந்தது?” முத்தம்மா சில வினாடிகள் எதுவும் பேசவில்லை.. பின்பு மெல்லிய தயக்கத்துடன், “நாங்கள் போராளி குடும்பம் இல்லையாம்.. கட்டாயம் நான் இயக்கத்துக்கு போகவேணுமாம்..அதாலை..” என்றுவிட்டு அவள் இடைநிறுத்தினாள்.

  “அதாலை..?” “என்னைக் கலியாணம் செய்யட்டாம்”, “மாப்பிள்ளை பாத்திட்டானாமே?”, என்றாள். முத்தம்மா அந்தக் கேள்வியில் தடுமாறியே போனாள். எனினும் ஒருவாறு சமாளித்தவளாக ஒரு பொய்யைச் சொல்லிவைத்தாள். “அதப் பற்றி ஒண்டும் சொல்லேல்ல” பார்வதி புடைத்தெடுத்த அரிசியை அரிக்கன் சட்டியில் கொட்டிவிட்டு, 

  “அவன் விஷயமில்லாமல் சொல்லமாட்டான்.. ஆரையோ பாத்திட்டான் போலை.. உவன் எப்பவும் உங்கடை குடும்பத்திலை வலு அக்கறை”, என்றாள்.

  “அவர் தான் அந்த மாப்பிள்ளை”, எனக் கத்தவேண்டும் போலிருந்தாலும் முத்தம்மா மிகச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். பார்வதி தொடர்ந்தாள், “வயது வந்தால் பொம்பிள்ளைப் பிள்ளையள் கலியாணம் கட்டத்தானே வேணும்”, அதுக்கேன் அழுறாய்?”

  “அது.. அது..”, எனத் தடுமாற்றத்துடன் இழுத்த முத்தம்மா”, இப்பிடி.. இடம்விட்டு இடமாய் ஓடிக்கொண்டிருக்கேக்க கலியாணம் எண்டு நினைச்சாலே வெறுப்பாய்க் கிடக்குது”, என்றாள்.

  “நாட்டு நிலைமை இண்டைக்கு ஒரு மாதிரி இருக்கும். நாளைக்கு வேற மாதிரி இருக்கும், அதுக்காகக் கலியாணம் கட்டாமல், பிள்ளை பெறாமல் இருக்கலாமே?” “எப்படியெண்டாலும்…” “நீ சும்மா இரு.. நானே அவனிட்ட சொல்லி எல்லா ஏற்பாடும் செய்யிறன்” “ஐயோ.. வேண்டாம்.. வேண்டாம்.. நானே அவரிட்டை சொல்லுறன்”, என அவசரப்பட்டு தடுத்தாள் முத்தம்மா.

  “ம்.. உன்ரை மனம் தான்.. சரி ஏதோ நல்லது நடந்தால் சரி”, என முடித்தாள் பார்வதி. அடுத்த மூன்று நான்கு நாட்களாக முத்தம்மா சுந்தரத்தைத் தனியாகச் சந்திப்பதை இயன்றவரை தவிர்த்தே வந்தாள். அவள் சுந்தரத்தை திருமணம் செய்வதை உளமார விரும்பினாள். ஆனால் அது அவளை நிரந்தரமாகவே அவர்களிடமிருந்து பிரித்துவிடுவதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதே வேளையில் அவனோ, தானோ போராளியாக மாறவேண்டிய தேவையையும் அவள் உணர்ந்திருந்தாள். ஆனால் இரு குடும்பங்களிலுமுள்ள முதியவர்களின் நிலைமையையும் அவளால் நிராகரிக்க முடியவில்லை.

  தனது ஆலோசனைக்கு முத்தம்மா என்ன முடிவு செய்துள்ளாள் என்பதை அறிய சுந்தரத்தின் மனம் தவித்த போதும் அதற்கான சந்தர்ப்பம் கிட்டாமலே போய்க்கொண்டிருந்தது. அவன் வீட்டில் நிற்கும் நேரம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஒவ்வொரு நாளும் எட்டு, பத்து வித்துடல்கள் அஞ்சலிக்காக வந்து கொண்டிருந்தன. அஞ்சலி ஏற்பாடுகளைச் செய்வது, வித்துடல் விதைப்பதற்கான பணிகளில் ஈடுபடுவது என அவன் ஓடியாடித் திரியவேண்டிருந்தது.

  இலுப்பைக் கடவை முற்றாகவே இடம்பெயர்ந்துவிட்டது. அவர்களில் மிகக் குறைந்த அளவினர் பாலியாற்றில் தங்கிவிட ஏனையோர் தேவன்பிட்டி, வெள்ளாங்குளம், சேலங்கா குடியிருப்பு, முழங்காவில் எனப் பல பகுதிகளிலும் பரந்து தங்கியிருந்தனர். தற்காலிகமான கடைகள், மருத்துவமனை, அரச காரியாலயங்கள் என எல்லாமே முழுங்காவிலில் மையம் கொண்டுவிட்டன. இந்த நிலையிலேயே மாவீரர் வணக்க நிகழ்வுகளும் மாவீரர் துயிலுமத் இல்லமும் போராளிகளின் பிரதான வழங்கல் பகுதிகளும் ழுழங்காவிலையே பிரதான மையமாக்கிக் கொண்டன. முழங்காவில் ஒரு பரபரப்பான குட்டி நகரம் போன்று மாறிவிட்டது. தொடர்ந்து ஒரு வாரகாலமாகவே பெரியமடுவிலிருந்து விடத்தல்தீவு வரையிலான களமுனை மிகவும் கடுமையாகவே இருந்தது.

  பள்ளமடு ஒரு சாதகமற்ற இடமாக இருந்த போதிலும் சிவத்தின் அணி வெகு உக்கிரமாகவே போராடிக்கொண்டிருந்தது. சற்றுத் தூரம் பின் வாங்குவதும் சில மணி நேரத்தில் அந்த இடத்தைப் பிடிப்பதுமாகப் போராளிகள் கடுமையாகப் போராடவேண்டியிருந்தது. விமானத் தாக்குதல், எறிகணைகள் என்பவற்றால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்காகவே சில சமயங்களில் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். ஆனால் சிவம் தன் தந்திரோபாயங்கள் மூலமும் போராளிகளின் அர்ப்பணிப்பான பங்களிப்பு மூலமும் சில மணி நேரத்திலேயே பின்வாங்கலை நிமிர்த்திவிடுவான்.

  டாங்கிகள், கவச வாகனங்களால் இராணுவத்தினர் பெரியளவு பயன்பெறமுடியவில்லை. ஆர்.பி.ஜி அணியும், ஆர்.சி.எல் அணியும் அவற்றை அசைய விடாமல் திணறடித்தன. மங்களாவின் அணியின் சண்டையும் ஆட்காட்டி வெளிக்கும் சன்னாருக்குமிடையே முன் பின்னுமாகக் களமுனை அடிக்கடி மாறிக்கொண்டிருந்தது. அங்கும் ஆட்காட்டி வெளி படையினருக்குச் சாதகமாகவும் அமைந்திருந்தது. எனினும் பெண் போராளிகளின் வீரம் செறிந்த போராட்டம், இராணுவத்தைத் திக்கு முக்காடவைத்தது. சிறு காயங்களுக்கு உட்படும் மகளிர் போராளிகள் உடனேயே தமது காயங்களுக்கு கட்டுப்போட்டுவிட்டு தொடர்ந்து போராடி படையினரின் முன்னேற்ற முயற்சியை முறியடித்துக் கொண்டிருந்தனர். சண்டை தொடங்கியதிலிருந்து நான்காம் நாளன்று மங்களா, ஒரு உள்ளிழுத்துத் தாக்கியழிக்கும் தந்திரோபாயத் தாக்குதலைத் தானே முன்னின்று வழிநடத்தினாள்.

  நேர் கோட்டில் நிற்கும் படையணி நடுப்பகுதியால் சண்டையிட்டவாறே பின் வாங்கி ஒரு அரை வட்டவடிவை உருவாக்கி அதற்குள் படையினரை இழுத்து எதிர்பாராத போது அதிரடியாகப் பாய்ந்து அவர்களை அழிக்கும் முயற்சியில் மங்களா பெரும் வெற்றியிட்டினாள். முப்பதுக்கு மேற்பட்ட படையினரையும் ஒரு டாங்கியையும் அழித்து பல படையினரையும் காயப்படுத்தினர் மகளிர் அணியினர். அந்தக் களத்தில் அது ஒரு முக்கியமான வெற்றித் தாக்குதலாகவே திகழ்ந்தது. சுகுணன் மிகவும் இக்கட்டான நிலையில் தனது அணியை வழிநடத்திய போதிலும் படையினரை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான்.

  பெரிய மடுவிலிருந்து முன்னேறிய ஒரு இராணுவ அணிக்கும் பரப்புக்கடந்தான் மடு வீதியிலிருந்து காட்டுக்குள் இறங்கிய ஒரு இராணுவ அணிக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அது மட்டுமன்றி அவனின் அணியில் பெரும்பாலான போராளிகள் புதியவர்கள். எறிகணைகள், டாங்கித் தாக்குதல்கள் மத்தியில் புதிய போராளிகளை வழி நடத்துவது மிகவும் சிரமமாகவேயிருந்தது. எனினும் அவன் சளையாமல் களமாடினான். அவனின் முனையில் வீரச்சாவு சற்று அதிகமாக இருப்பதே அவனுக்கு மிகவும் கவலையளிப்பதாயிருந்தது.

  விடத்தல் தீவை எப்படியும் கைப்பற்றிவிடுவது என்பதில் அரச படைகள் தீவிரம் காட்டினர். திருக்கேதீச்சரம் கடற்கரை வழியாக விடத்தல் காடுகளுடாக முன்னேறிய தரைப்படை, கடலில் நின்று கடற்படை, ஆகாய மார்க்கமாக விமானப்படை என்பன ஒன்றிணைந்து பெரும் ஒருங்கிணைப்புத் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தன. விடத்தல் தீவு ஆழங்குறைந்த சேற்றுக்கடல், டோறா படகுகள் கரைக்கு வரமுடியாது. ஆனால் நடுவில் ஒரு வாய்க்கால் போன்ற ஒரு ஆழமான பகுதி பள்ளிமுனை, எருக்கலம்பிட்டி வரையும் உண்டு. கடற்படையின் டோறாக்களும், ஏனைய பீரங்கிப் படகுகளும் அதில் நின்றே தாக்குதல்களை நடத்தின. எனினும் அவர்களின் பீரங்கி வேட்டுக்களுக்குள்ளால் புகுந்து கடற்புலிகளின் அணியினர் கடலில் இறங்கி அவர்களை நோக்கிப் போகும் போது பின்வாங்கி ஓடிவிடுவார்கள். உடனடியாகவே கடற்கரைப் பகுதியை நோக்கி எறிகணை மழை பொழிய ஆரம்பிக்கும். விமானங்கள் வந்து தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் என எதையும் மிஞ்ச விடாது நொருக்கித்தள்ளும்.

  விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் வேலை செய்ய ஆரம்பிக்க விமானங்கள் ஓடிவிடும். கடற்புலிகள் இருமுனைகளில் போராட வேண்டியிருந்தது. ஒரு புறம் கடலால் தரையிறங்க முயலும் கடற்படையினர். மறுபுறம் கடற்கரையால் விடத்தல் தீவில் ஊடுருவ முயலும் தரைப்படையினர். அதேவேளையில் அந்த இருமுனைச் சண்டையை விமானக் குண்டுகள் மத்தியில் நின்றே நடத்தவேண்டியிருந்தது. அன்று அதிகாலை நான்கு மணிக்கே போராளிகள் விடத்தல் தீவின் மீது தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர்.

  பள்ளமடு களத்தில் நின்ற சிவம், கடற்படையினர் ஒரு பெரும் தரையிறக்க முயற்சியை மேற்கொள்ளப் போகின்றனர் என்றே கருதினான். சில சமயங்களில் அப்படிக் கவனத்தை திசை திருப்பிவிட்டு பள்ளமடு வேலியையும் உடைக்க முயலலாம் என்பதால் அவன் தனது அணியையும் உச்ச தயார் நிலையில் வைத்திருந்தான். சில நிமிடங்களில் கேட்ட சத்தங்கள் கடற்புலிகளின் பீரங்கிப் படகுகளும் களத்தில் இறங்கிவிட்டதைச் சிவத்துக்கு உணர்த்தின.

  -தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

  (தொடரும்)
  முன்னைய தொடர்களை படிக்க
  நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 43
  நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 44
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 44 Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top