Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 45

அன்று ஆழியான் தலைமையிலான கடற்புலிகளின் சிறப்புப் படையணி களத்தில் இறங்கியது. அவர்கள்
அந்தக் கடலை அங்குலமங்குலமாக அறிந்து வைத்திருந்தபடியால் ஆழங்குறைந்த கடல் பகுதியிலும் ஆங்காங்கே உள்ள ஆழமான குறுகிய ஓடைகளால் பீரங்கிப் படகுகளை நகர்த்திச் சண்டையிட்டனர். ஆழியான் ஒரு சிறு குருவியில் ஏறி தாக்குதலை நடத்தியவாறே கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான். 

கடற்படையினரின் டோறாக்கள் கடலின் ஆழமான பகுதியில் நின்றே தாக்குதலை நடத்தின. அருகருகாக இரு டோறாக்கள் மட்டுமே ஆழமான ஆறு போன்ற பகுதிகளில் நின்று சண்டையிட முடியும். ஏனைய இரு டோறாக்கள் ஏறக்குறைய முந்நூறு மீற்றர் பின்னால் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. டோறாக்கள் இடிமுழக்கம் போல் தொடர்ந்து குண்டுகளை வீசின. கடற்புலிகளின் படகுகள் லாவகமாக அவற்றை விலத்தி ஓடியவாறே குண்டுகளை ஒவ்வொன்றாக வீசின. கடற்படையின் இரண்டு வோட்டஜெற் படகுகள் புலிகளின் குண்டுத்தாக்குதல்களில் பலியாகி மூழ்கத் தொடங்கின. இன்னொன்று எரிந்தவாறே பின்வாங்கி வேகமாக பள்ளிமுனையை நோக்கி ஓடியது. சண்டை அகோரமாக நடந்தது. கடற்புலிகள் ஏறக்குறைய ஒரு அரைவட்ட வடிவில் வியூகமமைத்து போரிட்டுக்கொண்டிருந்தனர். 

கடற்படையின் டோறாக் குண்டில் ஒரு கடற்புலிகளின் விசைப்படகு சேதமடையவே அது பின்னுக்கு எடுக்கப்பட்டது. அந்த இடத்தை ஈடு செய்ய வந்த இன்னொரு படகு மின்னல் வேகத்தில் எதிர்பாராத விதமாக டோறாக்களை நோக்கிப் பாய்ந்து சென்றது. இரு பக்கமும் டோறாக் குண்டுகள் விழ நடுப்பகுதியால் நீரைக் கிழித்துக் கொண்டு டோறாக்களை நோக்கி அது பறந்தது. கடற்படையினர் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒரு டோறாவைத் திருப்ப முயன்ற போது அதன் முன் பகுதி ஆழமற்ற சேற்றுப் பகுதியில் இடித்துக் கொண்டது. அந்தக் கணத்தில் மற்ற டோறாவைக் கரும்புலிப் படகு இடிக்கவே அது வெடித்து நெருப்பாய் எரிந்தது. சேற்றில் இடிபட்ட டோறாவில் இருந்தவர்கள் கடலில் குதித்து நீந்த ஆரம்பித்தனர். இன்னொரு புலிகளின் விசைப்படகு சம்பவ இடத்தைத் தாண்டி வேகமாக முன் செல்லவே பின்னால் நின்ற இரு டோறாக்களும் திரும்பியோடிவிட்டன. சம்பவ இடத்தை நெருங்கிய கடற்புலிகளின் படகு அணியினர் எஞ்சிய படையினரை அழித்துவிட்டு சேற்றில் சிக்கியிருந்த டோறாவுக்கும் தீயிட்டுவிட்டுத் தளம் திரும்பினர்.

இரு டோறாக்களும் எரிந்து மெல்ல மெல்ல கடலில் மூழ்கிக் கொண்டிருந்தன. அதிகாலையிலிருந்து அதிர்ந்து கொண்டிருந்த கடல் நிசப்தமாகிவிட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் வானில் தோன்றிய கிபிர், மிக் விமானங்கள் விடத்தல் தீவைக் குண்டுகளால் குளிப்பாட்டின. ஆனால் அந்தக் குண்டுகளில் பலியாக அங்கு எந்தவிதமான ஒரு உயிரினமும் இருக்கவில்லை. அடுத்த மூன்று நாட்களும் சொல்லும்படியாக எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. பள்ளமடுவில் இரு முறையும் சன்னாரில் ஒரு முறையும் சிறு முன்னேற்ற முயற்சிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஒரு சிறு எதிர்ப்புடன் அவை கைவிடப்பட்டன. இப்படியான அமைதிகள் ஒரு பெரும் புயலின் முன்னறிவித்தல் என்பதை போராளிகள் அனுபவம் ஊடாக அறிந்து வைத்திருந்ததால் அவர்கள் ஒவ்வொரு கணமும் விழிப்புடனேயே இருந்தனர். 

மடுவிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது மடு மாதாவின் திருச்சொரூபத்தையும் அங்கிருந்து இடம்பெயர்த்திவிட்டனர். ஏற்கனவே ரணகோஷ நடவடிக்கையின் போது மாதா கோவில் தாக்கப்பட்டு அறுபதுக்கும் மேற்பட்டோர் பலி கொள்ளப்பட்ட சம்பவம் அவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. எனவே மடு இராணுவக் கட்டுப்பாட்டில் வரும் போது பௌத்த மத வெறி பிடித்த படையினரால் மாதா சொரூபத்துக்கு ஊறு விளைவிக்கப்படும் என அஞ்சினார்கள். பங்குத் தந்தையும் மாதாவை இராணுவத்தினர் கையில் விட்டுவர விரும்பவில்லை. மன்னார் ஆயரிடமும் ஒப்படைப்பதற்கான வாய்ப்புக்களும் கிட்டவில்லை. எனவே மாதாவின் திருச் சொரூபத்தை தேவன்பிட்டி தேவாலயத்தில் கொண்டுவந்து வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. மக்களும் அதை விரும்பினர். மடு தேவாலய வளாகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த மக்களும் மாதா எங்கு சென்றாலும் தாங்களும் அங்கேயே குடியேறப் போவதாகக் கூறி தேவன் பிட்டிக்கே வந்துவிட்டனர். 

தேவன் பிட்டி குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவும் ஒரு கிராமம். அங்கு பரம்பரை பரம்பரையாக ஐம்பதுக்கு உட்பட்ட குடும்பங்களே வாழ்ந்துவந்தன. அங்குள்ள நீரின் பாதிப்பு காரணமாக அப்பகுதி மக்களுக்கு கண்களில் ஒருவித பாதிப்பு ஏற்படுவதுண்டு. இடம்பெயர்ந்து மடுவிலிருந்து தேவன்பிட்டிக்கு வந்த மக்கள் அதை ஒரு பொருட்டாக கருதவில்லை. அவர்கள் மாதாவைச் சுற்றியே தாங்கள் குடியிருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். கந்தசாமி இந்துவாக இருந்த போதிலும் அவனின் மனைவி மேரி புஷ்பம் கிறிஸ்தவ மதத்தை இறுக்கமாகக் கடைப்பிடித்து வந்தாள். கந்தசாமி அதைத் தடுப்பதுமில்லை. புஷ்பம் அவனைத் தனது சமயத்தில் சேரும்படி கேட்பதுமில்லை. மேரி புஷ்பம் அப்போது தான் மாலை ஆராதனையை முடித்துவிட்டு வந்து இரவு உணவு தயாரிப்பதற்காக அடுப்பை மூட்டினாள். கந்தசாமியும் இலுப்பைக்கடவையில் இருந்து வந்து சேர்ந்தான்.

குருக்களுரில் சிவமும் அவனின் தோழர்களும் துணை ஆயுதக்குழுவிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்றி மடுவுக்குக் கொண்டுவந்து சேர்த்த பின்பு அவன் புலிகளின் தீவிர ஆதரவாளனாகிவிட்டான். இரவு, பகல் பாராது அவர்களுக்கு எவ்வளவு ஆபத்து நிறைந்ததென்றாலும் கூட உதவிகளைச் செய்து வந்தான். மேரியும் அதைத் தடுப்பதில்லை. தன்னுடன் படித்த சிவம் ஒரு முக்கிய போராளியாக இருப்பதை நினைத்து அவளும் பெருமைப்பட்டாள். சோயாவை அவித்துவிட்டு சிறிதளவு தேங்காய்ப் பூவும் சீனியும் போட்டு குழைத்து இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடிந்ததும் இருவரும் வெளியில் நிலவில் இருந்து சிறிது நேரம் போராட்டம் பற்றியும் இடப்பெயர்வு பற்றியும் கதைத்தனர். அது முன்னிலவுக் காலமாதால் பத்து மணிக்கே நிலவு பட்டுவிட அவர்கள் போய்ப்படுத்துக் கொண்டனர். இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஏதோ சத்தம் கேட்பது போல் தோன்றவே கந்தசாமி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த புஷ்பத்தை எழுப்பினான்.

“ஏய்.. எழும்பு.. ஏதோ சத்தம் கேக்குது..” என்றுவிட்டுப் படுக்கையை விட்டு எழுந்தான் கந்தசாமி. அவளும், “என்னது..?”, என்றவாறே திடுக்கிட்டு எழுந்து கொண்டாள். எழுந்து வெளியே வந்து பார்த்த போது, ஆலய முன்றலில் சிலர் நிற்பதையும், ‘டக், டக்’, என மெல்லியதாக ஒரு ஒலி எழுவதையும் அந்த இருளிலும் அவனால் அவதானிக்க முடிந்தது. அவன் சற்றும் தாமதியாமல், “கள்ளன், கள்ளன்”, எனக் கத்தினான். புஷ்பமும், “கள்ளன்”, என பலமாகக் கத்தினாள். சத்தம் கேட்டதுமே ஆலய அருட்சகோதரர் கதவைத் திறந்து கொண்டு, ரோச்சை அடித்தவாறே வெளியில் வந்தார். சத்தம் கேட்டு ஆலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களிலிருந்து பலரும் ஓடி வரவே ஆலய முன்றலில் நின்றவர்கள் ஓட ஆரம்பித்தனர்.

கந்தசாமி ஓடிப்போய் ஒருவனைக் கட்டிப்பிடித்து விழுத்திவிட்டான். ஆலயக் காவலாளி எறிந்த கொட்டன் ஒருவனின் முழங்காலில் பட அவன் கீழே விழுந்துவிட்டான். மற்றவர்கள் நால்வரும் கடற்கரைப் பக்கம் ஓடிவிட்டனர். மக்கள் அவர்களை நோக்கி ஓட அவர்கள் வள்ளத்தின் எஞ்சினை ‘ஸ்ராட்’ செய்து படகேறி விட்டனர். இருளில் படகு போகும் ஒலியை விட வேறு எதையும் புரியமுடியவில்லை. பிடிட்ட இருவரையும் மக்கள் ஆலய வாசலுக்குக் கொண்டு வந்தனர். அதற்குள் ஆலயக்காவலாளி, ‘பெற்றோல்மாக்ஸ்’ விளக்கைக் கொழுத்திக் கொண்டுவந்துவிட்டார். அந்த ஊர்க்காரரான யோசேப் மிகவும் கோபமடைந்திருந்தான். பிடிபட்ட இருவருக்கும் கன்னங்களில் மாறி மாறி அறைந்துவிட்டு அவர்களை முழங்காலில் நிற்க வைத்தான். உடனடியாகவே அங்கு வந்த அருட் சகோதரர் கண்டிப்பான குரலில், “யோசப், அவையளை ஒண்டும் செய்ய வேண்டாம்”, என்றார்.

அந்தக் கட்டளையுடன் அனைவரும் இருவரையும் விட்டு விலகிக் கொண்டனர். அருட் சகோதரர் தெளிவாகவும் நிதானமாகவும் பேசினார், “நீங்கள் எல்லாரும் நடு இரவிலை இஞ்சை ஏன் வந்தனீங்கள் எண்டதை மறைக்காமல் சொன்னால் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராமல் நான் பாப்பன், அப்பிடி நீங்கள் சொல்ல மறுத்தால் உங்களை போராளியளிட்டை ஒப்படைக்கிறதை விட வேற வழியில்லை”, முழங்காலில் நின்றவர்களில் ஒருவன், “போராளிகளிடம் ஒப்படைப்பது”, என்ற வார்த்தைகளைக் கேட்டதுமே ஓடிப்போய் அருட் சகோதரரின் காலில் விழுந்து கெஞ்சினான். “வேண்டாம்!, சுவாமி வேண்டாம்! நான் எல்லா உண்மைகளையும் சொல்லியிடுறன்”, என்றான் அவன்.

அப்போது தான் கந்தசாமி அவனின் முகத்தை நன்றாகப் பார்த்தான். அவன் குருக்களுரில் தன்னைக் கடத்திக் கொண்டு சென்று கொலை செய்ய முயன்ற ஆயுதக் குழுவில் ஒருவன் என்பதை இனம் கண்டுகொண்டான். ஆனால் அருட்சகோதரர் விசாரிக்கும் போது குறுக்கீடு செய்வது முறையல்ல என்பதால் கந்தசாமி அமைதி காத்தான். “சரி.. சரி.. சொல்லு”, என்றார் அருட்சகோதரர்.

அவன் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டுப் பயந்த குரலில் சொல்ல ஆரம்பித்தான். “ஆமிக் கொமாண்டர் என்னைக் கூப்பிட்டு எப்பிடியாவது மாதா சிலையைக் கொண்டு வந்தால் பெரும் தொகைப் பணம் தரலாம் எண்டு சொன்னார். நான் பள்ளி முனையிலை போய் சிலரை இரகசியமாய்ச் சந்திச்சு புலியள் மடுமாதாவைக் கடத்திக் கொண்டு போய் தேவன் பிட்டியிலை வைச்சிருக்கிறாங்கள் எண்டும் அதை எப்பிடியும் மீட்டுக் கொண்டு வந்து ஆயரிட்டை ஒப்படைக்க வேணுமெண்டும் சொன்னன்.

அவையும் அதை நம்பியிட்டினம். நாங்கள் எல்லாரும் மீன்பிடிக்கிற மாதிரி வள்ளத்திலை வந்தம்” “சரி.. அப்பிடியெண்டால் ஆயரிட்டை அனுமதி எடுத்தநீங்களே?” “இல்லை! ஆயர் களவை ஏற்கமாட்டார். அதாலை சொல்லேல்ல.. சொரூபத்தைக் கொண்டு போய் ஆமிக் கொமாண்டரிட்டை ஒப்படைக்கிறது தான் என்ரை திட்டம்” மற்றவன் அவசரமாகக் குறுக்கிட்டான், “சுவாமி! இவன் அதை எங்களிட்டை சொல்லாமல் ஏமாத்திப் போட்டான். நாங்கள் சொரூபத்தை ஆயரிட்ட ஒப்படைக்கிறது எண்டு தான் நினைச்சம்” அருட் சகோதரர் அவனிடம் கேட்டார்,

“அப்பிடியே உண்மையைச் சொல்லு” அவன் எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டான். அதுவரை பொறுமை காத்த கந்தசாமி பலமாக, “சுவாமி! இவன் பொல்லாத ஆள்! இவன் காட்டிக்குடுக்குற கூட்டத்தைச் சேந்தவன். இவனை போராளியளிட்ட ஒப்படைக்க வேணும்”, எனக் கத்தினான்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)



முன்னைய தொடர்களை படிக்க
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 43
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 44