தமிழ் அரசியல்வாதிகளால் சலிப்படையும் தமிழ் மக்கள்!-நா.யோகேந்திரநாதன் - THAMILKINGDOM தமிழ் அரசியல்வாதிகளால் சலிப்படையும் தமிழ் மக்கள்!-நா.யோகேந்திரநாதன் - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ் அரசியல்வாதிகளால் சலிப்படையும் தமிழ் மக்கள்!-நா.யோகேந்திரநாதன்


  அண்மையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றபோது அதன் தலைவர் மனோ கணேசன் வடக்கிலும், கிழக்கிலும் மலையகத்திலும் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளையிட்டு தனக்கு சலிப்பு ஏற்படுகிறதெனவும் நீண்ட நாள் இந்தப் பரப்பில் இருக்கத் தன் மனம் விரும்ப மறுக்கிறதெனவும் தெரிவித்திருந்தார்.

  இலங்கையில் போர் முனைப்புப் பெற்றிருந்த நாட்களில் தலைநகரில் இருந்தே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்த அநீதிகளுக்காக ஓங்கிக் குரல் கொடுத்து வந்தவர் மனோ கணேசன் என்பதை மறந்துவிடமுடியாது. ஏற்கனவே அவ்வாறான துணிச்சலான பணியை மேற்கொண்டு வந்த திரு.குமார் பொன்னம்பலம் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டும்கூட உயிரச்சத்தையும் பொருட்படுத்தாமல் தமிழ் மக்களின் நியாயங்களைச் சிங்கள மக்கள் மத்தியிலும் சர்வதேச அரங்கிலும் ஒலித்து வந்தவர் மனோ கணேசன்.

  இவ்வாறான நெருக்கடி மேல் நெருக்கடிகள் மத்தியிலும் துணிவுடனும் நேர்மையுடனும் செயற்பட்டு வந்த அவர் தற்சமயம் தமிழர்களின் தலைவர்களின் நடத்தைகள் தன்னைச் சலிப்படைய வைக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளமை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆனாலும் தனது சலிப்புக்கு முன் வைத்த காரணங்கள் அலட்சியப்படுத்தி விடக் கூடியவை அல்ல என்பது முக்கியமாகும்.

  அதேவேளையில் அவர் குறிப்பிட்ட காரணங்கள் மட்டுமின்றி மேலதிகமான காரணங்களாலும் அவருக்கு ஏற்பட்ட சலிப்பு தமிழ் தலைமைகள் மீது தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் எடுக்காமல் விடமுடியாது.

  இந்து சமுத்திரப் பிராந்திய மேலாதிக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான சீனாவுக்கும் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்குமான போட்டி கூர்மையடைந்துள்ள நிலையில் அவர்கள் இலங்கையைத் தமது தளமாகப் பிரயோகிப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. அவ்வகையில் மூன்று தரப்பினரும் இலங்கையின் இனப்பிரச்சினையை தமது நோக்கங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நகர்வுகள் பல முனைகளிலும் ஆரம்பித்துள்ளன.

  இந்த நிலையில் தமிழ் மக்கள் இப்பிராந்திய, சர்வதேச மேலாதிக்கப் போட்டியில் வழமைபோல் பயன்படுத்தப்படும் காய்களாக உருட்டப்படப் போகின்றனரா. அல்லது இந்த நிலைமையைப் பயன்படுத்தி எமக்குச் சாதகமான சூழலை உருவாக்கப் போகிறார்களா என்பதே இப்பொழுது எழும் கேள்வியாகும். ஆனால் தமிழ் தலைமைகளிடம் அவ்வகையான முயற்சிகளை மேற்கொள்வதற்கான குறுகிய கால நீண்ட கால வேலைத்திட்டமோ அதைமுன்னெடுப்பதற்கான உறுதியோ, தந்திரோபாயமோ இருப்பதாகவோ தெரியவில்லை. குறைந்த பட்சம் ஒரு பொதுக் கொள்கையை வகுக்குமளவுக்குக் கூட தயாராயில்லை.

  எந்தவொரு விடயத்திலும் கொள்கையும் தந்திரோபாயமும் முக்கியமானவையாகும். தந்திரோபாயம் இல்லாத கொள்கை இலக்கை அடையமுடியாமல் தோற்கடிக்கப்படும். அதேபோன்று கொள்கையில்லாத தந்திரோபாயம் முதலில் வெற்றி பெறுவதுபோல் தோன்றினாலும் இறுதியில் படுதோல்வியிலேயே முடியும்.

  இது அரசியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். ஆனால் எமது தமிழ்த் தலைமைகளிடம் தெளிவான நீண்ட கால, குறுகியகால இலக்குகளைக் கொண்ட கொள்கையோ, இலக்கை அடைவதற்கான தந்திரோபாயமோ இருப்பதாகத் தெரியவில்லை.

  13வது திருத்தம் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வு அல்ல என்றும், இதுவொரு ஆரம்பப் புள்ளி என்று ஒரு சாராரும், இது ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளும் ஒரு திட்டமாதலால் இதை ஏற்கமுடியாதெனவும் சர்வதேச அனுசரணையுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமெனவும் ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கொள்கைகளை வாய்ப்பாடு மாதிரி ஓதி வருகின்றனர். ஆனால் இவற்றை அடைவதற்கான வழிமுறைகளை இதுவரை எவரும் முன்வைத்ததாக இல்லை.

  மாறாக இந்தியா மூலமோ அமெரிக்கா மூலமோ எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்பதைக் கூறித் தமிழ் மக்களை காலங்காலமாக ஏமாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்களிடம் எப்படியான தீர்வு வேண்டுமெனக் கோரும் ஒருமைப்பட்ட உறுதியான, நேர்மையான தீர்வுத் திட்டமோ கிடையாது.

  💥💥அமெரிக்க செனட்டில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டதையடுத்து அமெரிக்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுகளை நடத்த அழைத்திருந்தது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் வேறு இரு சட்டத்தரணிகளும் அமெரிக்கா சென்று பேச்சுகளில் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதனோ சித்தார்த்தனோ இக்குழுவில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அப்படியானால் சுமந்திரன் தலைமையில் சென்ற சட்டத்தரணிகள் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் என நம்பமுடியுமா? 💥💥

  இன்னொருபுறம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி இந்தியாவிடம் ஒன்றிணைந்த கோரிக்கையை முன்வைக்கும் முகமாக 15 தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து பேச்சுகளை நடத்தி வருகின்றன. இதில் மாவை சேனாதிராஜாவோ கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ இணைந்துக் கொள்ளவில்லை. தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணையும் சந்தர்ப்பத்திலும்கூட அதில் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து கொள்ளவில்லை. இந்த இரண்டு சம்பவங்கள் மூலமும் தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே குரலில் தமது கோரிக்கைகளை அமெரிக்காவிடமோ, இந்தியாவிடமோ முன் வைக்கும் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டு விட்டது.

  எனவேதான் தமிழ் தலைமைகளின் நடவடிக்கைகள் தன்னைச் சலிப்படைய வைக்கின்றன என மனோ கணேசன் கருத்து வெளியிட்டுள்ளார். எமது கோரிக்கைகளை ஒன்றிணைந்து வைக்கத் தயாரற்ற நிலையில் தமிழ் மக்களுக்கும் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியுமா?

  இப்படியான ஒரு இழுபறி நிலையில் கடந்த 21.12.2021 அன்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்ப் பேசும் மக்களின் கட்சிகளின் நிலைப்பாட்டை ஒரு ஆவணமாகத் தயாரித்து இந்தியாவிடம் கையளிக்குமுகமாக ஒன்றுகூடல் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ், மலையக. முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் கலந்து கொண்டன. இதில் தமிழரசுக் கட்சியின் சார்பில் சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  அங்கு ஏற்கனவே தமிழ் பேசும் கட்சிகளால் தயாரிக்கப்பட்டிருந்த 5 பக்க ஆவணம் கையளிக்கப்பட்டது. எனினும் இதைத் தமிழரசுக் கட்சியினர் ஏற்க மறுத்து பிறிதொரு ஆவணத்தை முன் வைத்தனர். இந்நிலையில் நீண்ட விவாதங்களின் பின்பு தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த ஆவணத்தில் முன்னைய ஆவணத்தின் சில பகுதிகள் இணைக்கப்படுவதற்கான இணக்கம் காணப்பட்டது. இந்நிலையில் சுமந்திரன், மனோகணேசன், செல்வம் அடைக்கலநாதன், நிசாம் காரியப்பர், சுரேந்திரன், ஸ்ரீகாந்தா, மாவை சேனாதிராசா ஆகியோர் ஒன்றிணைந்து கலந்துரையாடிப் புதிய நகல் வடிவத்தைத் தயாரித்தனர்.

  இதில் தமிழ் மக்களின் முக்கிய எட்டு பிரச்சினைகளும் ஒன்றுகூடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்களும் இணைக்கப்பட்டுப் புதிய ஆவணம் தயாரிக்கும் பொறுப்பு சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆவணம் தயாரிக்கப்பட்ட பின்பு அது எல்லாக் கட்சிகளிடமும் ஒப்படைக்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்டுப் பின்பு இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  மனோ கணேசன் மட்டுமின்றி தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளின் செயற்பாட்டில் சலிப்படைந்துள்ள நிலையில் அனைத்துத் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வந்தது ஒரு முன்னேற்றம் என்றே சொல்லவேண்டும். அதேவேளையில் இந்தப் பொது உடன்பாடு இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பிக்க மட்டும் தானா அல்லது இது ஒரு பொதுக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

  ஒன்றிணைந்த செயற்பாட்டில் இரா.சம்பந்தன், சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் மேற்கொண்டுவரும் நிராகரிப்புப் போக்குகள் இத்தகைய நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதில் ஆச்சரியமில்லை.

  ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை நடத்த சீனா மேற்கொண்ட முயற்சிகள் நிராகரிக்கப்பட்டமை, நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பு ஒத்தி வைக்கப்பட்டமை போன்ற விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு ஏதோவொரு உள்நோக்கத்துடன் செயற்படுகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  சர்வதேச முரண்பாடுகளும் பிராந்திய சூழலும் தமிழ் மக்களுக்குச் சாதகமான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினாலும் தமிழ் தலைமைகள் யாருக்கும் விலைபோகாமல் ஒன்றிணைந்து, உறுதியுடன் முன் செல்வதன் மூலமே அவை எமக்குப் பயன்படும் விதத்தில் அமைய முடியும். அதற்கான அறிகுறிகள் வெகு குறைவாகவே காணப்படும் நிலையில் தமிழ் மக்கள் சலிப்படைவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

  நன்றி-அருவி 

  முன்னைய தொடர்களை படிக்க

  நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 43
  நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 44

  நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 45


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ் அரசியல்வாதிகளால் சலிப்படையும் தமிழ் மக்கள்!-நா.யோகேந்திரநாதன் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top